மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதி பழுது அடைந்து காணப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரகாலமாக மேம்பாலம் வழியாக அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. நேற்று முதல் போக்குவரத்து தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதியாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் தேவையான சல்லி கிடைக்காததால் தார் போடும் பணி தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் தற்போதும் கடுமையான போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டுள்ளது.
மார்த்தாண்டம் சந்திப்பைக் கடந்துசெல்ல சுமார் ஒரு மணிநேரத்திற்கு அதிகமாகக் கனரகவாகனங்கள் அவதிப்பட்டுவருகின்றன. இதற்கிடையில் சல்லி கிடைத்து பணிகள் இன்றுதொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். திங்கள்கிழமை முதல் மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.