குமரி மாவட்டத்தில் போக்குவரத்துக்கு விதிகளை மீறும்
வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டிரைவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் டிரைவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் புத்தேரி, ஒழுகினசேரி, கலெக்டர் அலுவலக சந்திப்பு ஆகிய பகுதிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள்கள் ஓட்டி வந்த 6 பேருக்கு தலா ரூ. 1000 விதம் ரூ. 6000 அபராதம் விதிக்கப்பட்டது. மீனாட்சிபுரத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனம் நிறுத்தியதாக ஒரு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். இப்படி மாநகர் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 31 நாட்களில் 3, 421 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.














