அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலான் மஸ்க் விலகல் – பின்னணி என்ன?

0
157

அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

“சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில், தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த அதிபர் டொனல்டுக்கு ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். இதை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.

பின்னணி என்ன? – அதிபர் ட்ரம்ப்பின் புதிய வரி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மஸ்க். ‘ஏமாற்றமடைந்தேன்’ என அதை விமர்சித்திருந்தார். இந்நிலையில், அந்த விமர்சனத்தை வெளிப்படுத்திய மறுநாளே அரசு பொறுப்பில் இருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார்.

புதிய வரி மசோதாவின் சில அம்சங்களில் தனக்கு விருப்பம் இல்லை என ஊடகத்துடனான பேட்டியில் மஸ்க் தெரிவித்திருந்தார். இனி ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடு சார்ந்து மஸ்க் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட DOGE துறையில் மஸ்க்கை நியமித்தார் ட்ரம்ப். அதிபர் தேர்தலில் ட்ரம்ப்புக்கு மஸ்க் உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செயல்திறன் துறையானது அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆலோசனை, வழிகாட்டுதலை வழங்கும். அதேபோல பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்க தொழில்முனைவோர் அணுகுமுறையை உருவாக்கும் என்றும், வெள்ளை மாளிகை, மேலாண்மை அலுவலகம் மற்றும் பட்ஜெட் போன்ற விவகாரங்களில் இந்த துறை பங்கு கொள்ளும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here