குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக அவ்வப்போது இரவு பகலாக என கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளது. கோதையாறு உட்பட பரளியாற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்த ஆற்றுப்பகுதிகளில் குளிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோதையாறும், பரளி ஆறும் ஒன்று சேரும் குமரி தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீரின் அளவு தற்போது அதிகரித்துள்ளது. இதனால் குழித்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சப்பாத்து பாலத்தின் மீது தண்ணீர் மறுகால் பாய்வதால் அந்தப் பகுதி வழியாக பொதுமக்கள் நடமாடவும், இருசக்கர வாகனங்களில் செல்லவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது – சப்பாத்து பாலம் மூடப்பட்டுள்ளது.