கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சிறப்பு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா துறை அலுவலர்களுடன் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து, பொதுமக்களின் மனுக்களை பெற்று தெரிவிக்கையில்-இன்று கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட 13 கிராமங்களுக்கு சிறப்பு வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.
நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பான மனுக்களும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மனுக்களும், சுகாதாரத்துறை குறித்து மனுக்களும் என 147 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும் 48 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடி தீர்வு காண வருவாய் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு கூறினார். முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நட்டார்கள். இந்நிகழ்ச்சியில், கிள்ளியூர் வட்டாட்சியர் திரு. ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.