கிள்ளியூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் மின்விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிய மின் விளக்குகள் அமைப்பதற்காக ஆன்லைன் மூலம் பேரூராட்சி சார்பில் கிள்ளியூர் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆறு வார்டுகளுக்கு எஸ்டிமேட் எடுக்கப்பட்டு பணம் கட்டப்பட்டுள்ளது.
பணம் கட்டி சுமார் 6 மாதங்களாகவும் புதிய மின் விளக்குகளுக்கான மின் கம்பிகள் அமைக்கப்படவில்லை. மேலும் மின்வாரிய அதிகாரிகளோ, மின் ஊழியர்களோ ஒரு அவசரத் தேவைகளுக்காக போன் செய்தால் எடுப்பதில்லை எனவும் அலுவலகத்தில் போன் செய்தால் போன் ரிசீவரை கீழே எடுத்து வைத்து விடுவதாகவும், மின்பாதையில் உள்ள மரக்கிளைகள் வெட்டப்படுவது இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
இதனால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் அதிகாரிகள் மீதும் பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிள்ளியூர் பேரூராட்சி தலைவர் ஷீலா சத்யராஜ் தலைமையில் பேரூராட்சி துணை தலைவர் சத்யராஜ் முன்னிலையில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.














