சாதியை காரணம் காட்டி கோயில் திருவிழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் மறுவடிவமே: நீதிபதி வேதனை

0
227

சாதியை காரணம் காட்டி கோயில் திருவிழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் மறுவடிவமே என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

‘பெரியபுராணம் தந்த சேக்கிழார் குன்றத்தூரில் கட்டிய திருநாகேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் இன்று (மே 13) தொடங்கி மே 16 வரை நடைபெறவுள்ளது. இந்த கோயில் திருவிழாவுக்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த குறிப்பிட்ட சாதியினரிடம் மட்டுமே நன்கொடை வசூலிக்கப்படுகிறது. மற்ற சமுதாய மக்களிடம் நன்கொடை பெறப்படவில்லை’ என கூறி குன்றத்தூரை சேர்ந்த அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத் தலைவரான இல.பாண்டியராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அனைவரும் சமமே: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘இந்த நாட்டில் தீண்டாமை இன்னும் பல்வேறு ரூபங்களில் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. கோயில் திருவிழாவுக்கு சாதியைக் காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமே. இது வேதனைக்குரியது.

கடவுள் முன்பாக அனைவரும் சமமே. அங்கு சாதிக்கு வேலை இல்லை. எனவே, எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் அனைத்து சாதி, சமயத்தவர்களிடமும் நன்கொடை வசூலிக்க வேண்டும். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here