தேசிய கல்விக் கொள்கை மூலம் தாய்மொழியில் மருத்துவம், பொறியியல் பயிலலாம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 4-வது ஆண்டாக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. ஊட்டி ராஜ்பவனில் நடந்த மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆர்.கிரிலோஸ்குமார் வரவேற்றார். மாநாட்டைத் தொடங்கிவைத்து குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது:
பயங்கரவாதம் என்பது ஒற்றுமையாக கையாளப்பட வேண்டிய, உலகளாவிய அச்சுறுத்தலாகும். பாரதம் உலகில் அமைதியை விரும்பும் நாடு. நமது நாகரிக நெறிமுறைகள் வாசுதேவ குடும்பகத்தைப் பிரதிபலிக்கின்றன. பிரதமரின் தலைமைப் பண்பு நமது நாட்டுக்கு உத்தரவாதம். தேசிய நலனே எப்போதும் முதன்மையானது. தற்போது உலக நாடுகள் கடும் சவால்களையும், விரைவான தொழில்நுட்ப சீர்குலைவையும் எதிர்கொள்கின்றன.
தேசத்தை கட்டமைத்து, சமூகத்தை மாற்றும் வலிமை கல்விக்கு உண்டு. நாட்டில் 50 மில்லியன் இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறந்த கல்வி நிறுவனங்கள் இருந்தன. காஞ்சிபுரம் கல்வியில் சிறந்து விளங்கியது. அதேநேரத்தில், நமது கல்வியை மேம்படுத்த வேண்டும்.
குருகுலம் என்ற சிறந்த கல்வி அமைப்பு மூலம் சமூகத்துக்கு சேவையாற்றி வந்தோம். நாட்டில் 11 செம்மொழிகள் உள்ளன. இவை நமது கலாச்சாரம், பண்பாடு, கல்வியைப் பறைசாற்றுகின்றன. கல்வியில் மாற்றம் செய்ய வேண்டிய தருணம் இது. இந்த நடைமுறையால் உலக அளவில் நமது நாடு வல்லரசாக மாறி வருகிறது.
நாம் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். மேற்கத்திய மற்றும் காலனியாதிக்க மனப்பான்மையை விட்டு, நமது பாரம்பரிய கல்வி முறையை இளைய சமுதாயத்துக்கு அளிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை மக்கள் நலனுக்கானது. இதன் மூலம் தாய்மொழியில் மருத்துவம், பொறியியல் மற்றும் உயர் கல்வியைக் கற்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் துணைவேந்தர்கள் கிருஷ்ணன் (தஞ்சை தமிழ்ப் பல்கலை.), பஞ்சநாதன் (காந்தி கிராம பல்கலை.), பாரதி ஹரிசங்கர் (அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலை.) ரஜத் குப்தா (ரங்கராஜன் – டாக்டர் சகுந்தலா பல்கலை.), முத்தமிழ்ச் செல்வன் (எஸ்ஆர்எம் பல்கலை.) பட்டாச்சாரியா (சிவ் நாடார் பல்கலை.), ராஜேந்திரன் (அமித் பல்கலை.) சுதிர் (விநாயகா மிஷன் பல்கலை.) சஜின் நற்குணம் (நூருல் இஸ்லாம் பல்கலை.) மற்றும் பல்கலைக்கழக இயக்குநர்கள், டீன்கள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, ஊட்டியில் நடந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று காலை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனது மனைவியுடன் ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் தளத்துக்கு வந்தார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ராஜ்பவன் வந்தார்.