குமரியில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் வருடம் தோறும் மூலக் கோயிலில் சித்திரை மாதம் பத்தாம் நாள் பத்தாமுதய பொங்காலை நடத்தப்படுவது வழக்கம். இந்த வருட பொங்காலை நாளை காலை வழக்கமான பூஜைகள் முடித்த உடன் நடைபெறுகிறது. பண்டார அடுப்பில் கோயில் தந்திரி தீ மூட்ட பத்தாமுதய பொங்கல் நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. இதில் தமிழக கேரள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். பொங்காலையில் கலந்து கொள்பவர்கள் நாளை காலை 9 மணிக்குள் தேவஸ்தான வளாகத்திற்குள் வருகை தர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் நடப்பதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக குமரி மேற்கு கடற்கரை சாலையில் கண்ணனாகம் சந்திப்பு முதல் பழைய உச்சக்கடை வரை கனரக வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர்.