திமுக அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பேச பேரவை தலைவர் அனுமதிக்கவில்லை என வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஒரு பொருள் குறித்து பேச பேரவைத் தலைவரிடம் அனுமதி கோரினார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி வழங்காததால், அதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகன் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு சொந்தமான சென்னை, கோவை, திருச்சியில் உள்ள இல்லங்கள், அலுவலகங்களில் கடந்த 7-ம் தேதி முதல் மத்திய அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதில் மேல் விசாரணையும் நடத்தி, கடந்த 11-ம் தேதி விளக்கமான செய்தி குறிப்பையும் வெளியிட்டுள்ளது.
அதேபோல் வனத்துறை அமைச்சர் பொன்முடி, பெண்களை கொச்சைப்படுத்தி சென்ற வாரம், நிகழ்ச்சி ஒன்றில் அவதூறாக பேசியுள்ளார். அமைச்சராக பதவி ஏற்கும் போது அவர் ஏற்ற உறுதிமொழியை மீறி அவர் நடந்து கொண்டார்.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறையான டாஸ்மாக் நிறுவனம், கடைகள், தனியார் மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை கடந்த மாதம் 6-ம் தேதி சோதனை நடத்தியது. இதில் முதல்கட்டமாக ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை தொடங்கும் முன்பே பேரவைத் தலைவரிடம் மனு அளித்தோம். அதைத்தொடர்ந்து கேள்வி நேரம் முடியும் வரையும் அமைதியாகவே இருந்தோம். அதன் பின்னரும் இதுகுறித்து விவாதிக்க பேரவைத் தலைவர் அனுமதியளிக்கவில்லை.
இதை கண்டித்தே வெளிநடப்பு செய்துள்ளோம். முதல்வர் ஸ்டாலின் மாநில சுயாட்சி குறித்து கொண்டு வந்த 110 விதி என்பது ஒரு கண்துடைப்பு நாடகமாகும். அதுவும் மாநில சுயாட்சி குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்ததை இன்று நினைவுபடுத்துவது அவசியம் இல்லாதது.
மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மாநில சுயாட்சி குறித்து குரல் கொடுக்காமல், தற்போது குரல் கொடுப்பதினால் என்ன பயன், திமுக அமைச்சர்கள் மீது எழுந்துள்ள மக்களின் கோபத்தை மடைமாற்றும் வகையில் இதை கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.














