சீனா மீது 50% கூடுதல் வரி விதிக்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

0
216

அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “சீனா ஏற்கனவே நிர்ணயித்துள்ள சட்டவிரோத வரிகளுடன் கூடுதலாக 34% பழிவாங்கும் வரிகளை விதித்தது. ஏப்ரல் 8-ம் தேதிக்குள் சீனா தனது 34% வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை என்றால், மறுநாள் அதாவது, ஏப்ரல் 9-ம் தேதி முதல் சீனா மீது 50% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். கூடுதலாக, சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும். பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக நடைபெறும்” என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன., ஏப்ரல் 10-ம் தேதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கான சீனாவின் பதிலடியாக இது அமைந்துள்ளது. சீன வர்த்த அமைச்சகம் இதனை அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here