தேவாலய நில விவகாரத்தை எழுப்பிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருக்கு கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க தேவாலயங்கள், அரசு சாரா நிலங்களை அதிகளவில் வைத்துள்ளன என ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆர்கனைஸர் இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டி மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘ வக்பு சட்ட திருத்த மசோதா, தற்போது முஸ்லிம்களை குறிவைக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் இது மற்ற சிறுபான்மையினரை குறிவைக்க முன்மாதிரிய ஏற்படுத்தியுள்ளது என நான் கூறியிருந்தேன். ஆர்எஸ்எஸ் தனது கவனத்தை தேவாலயங்கள் மீது திருப்ப நீண்ட காலம் ஆகவில்லை’’ என தெரிவித்திருந்தார்.
இந்த கட்டுரை குறித்து கவலை தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் , ‘‘ வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய பிறகு, சங் பரிவார் கத்தோலிக்க தேவாலயங்களை குறிவைப்பது ஆர்எஸ்எஸ் இதழின் கட்டுரை மூலம் புரிந்து கொள்ளப்பட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
இதற்கு எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருப்பதாவது: காங்கிரஸின் பொய் அரசியலை பயன்படுத்துவதற்கு முன்பு, அரசியல்சாசனத்தை ராகுல் காந்தி படித்து அறிய வேண்டும். நிலைத்தை வைத்திருப்பது குற்றம் அல்ல. ரயில்வே, ராணுவம் ஆகியவை அதிக நிலங்களை வைத்துள்ளன. ஆனால், கர்நாடகாவில் மக்கள் நிலங்களை காங்கிரஸ் அபகரிப்பது போன்றும், நிலங்களை அபகரிக்க வக்பு முயற்சித்தும்தான் தவறு. உங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுவது, பொய் சொல்லி அவர்களின் மனதில் நஞ்சை விதைப்பது, துரோகம் செய்வதுதான் தவறானது. அதைத்தான் ராகுல் காங்கிரஸ் செய்கிறது.
கூட்டணி கட்சிகளை மகிழ்விக்கும் போட்டியில் குதித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கேரள பொருளாதாரத்தை சீரழித்து, இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி, அரசு முதலீடு செய்த நிறுவனங்களை மகளின் ஐடி நிறுவனத்துக்கு பணம் வழங்க செய்த முதல்வர் பினராயி விஜயன், கேரள மக்களின் மனதை நஞ்சாக்கும் ராகுல் குழுவில் இணைந்துள்ளார். இந்த வேலை பலன் அளிக்காது. இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.