தனிக்கட்சி தொடங்குகிறார் பசனகவுடா

0
249

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் எம்எல்ஏவுமான‌ பசனகவுடா பாட்டீல் யத்னால் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பீஜாப்பூர் நகர தொகுதியின் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் மத்திய அமைச்சருமான பசனகவுடா பாட்டீல் யத்னால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பீஜாப்பூரில் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் பசனகவுடா பாட்டீல் யத்னால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஊழலுக்கு எதிராகவும், குடும்ப அரசியலுக்கு எதிராகவும் பேசியதால் என்னை பாஜகவில் இருந்து நீக்கியுள்ளனர். இந்து மக்களின் நலன்களையும், வட கர்நாடகாவின் நலன்களையும் பாதுகாக்க பாஜக தவறிவிட்டது.

சில பாஜக மூத்த நிர்வாகிகளும், சர்வதேச நன்கொடையாளர்களும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். அரசியலில் தனித்து இயங்குவதற்கு எனக்கு உதவி செய்வதாக கூறியுள்ளனர். அதனால் இந்துக்களின் நலனுக்காக இந்த ஆண்டு தசரா (விஜயதசமி) பண்டிகைக்கு முன்னர் தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்துள்ளேன்.

மத்திய அமைச்சர் பிரஹ‌லாத் ஜோஷிக்கு நெருக்கமானவர் புதிய கட்சி தொடங்க, ரூ.11 லட்சம் நன்கொடை அளிப்பதாக கூறினார். அதனை ஏற்க மறுத்துவிட்டேன். யாரிடமும் நன்கொடை வாங்காமல் இந்துக்களின் ஆதரவுடன், இந்துக்களுக்கான கட்சியை ஆரம்பிப்பேன். எனது அரசியல் எதிரிகளையும் பாஜகவை அழித்துவரும் துரோகிகளையும் வீழ்த்துவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வடகர்நாடகாவில் முக்கிய லிங்காயத்து தலைவராக விளங்கும் பசனகவுடா பாட்டீல் யத்னாலின் அறிவிப்பு, பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here