கனடா தேர்தலில் சீனா, இந்தியா தலையீடு: உளவு அமைப்பு குற்றச்சாட்டு

0
134

அடுத்த மாதம் நடைபெற உள்ள கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடு இருக்கலாம் என சிஎஸ்ஐஎஸ் எனப்படும் அந்த நாட்டின் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் எனக் கோரி காலிஸ்தான் உள்ளிட்ட சில பிரிவினைவாத இயக்கங்கள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கனடா நாட்டில் வசித்து வந்த பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதை இந்தியா மறுத்தது. தொடர்ந்து இருதரப்பு நாடுகளுக்கு இடையிலான உறவு விரிசல் அடைந்தது. இந்நிலையில், தேர்தலில் தலையிடலாம் என்ற குற்றச்சாட்டு பாய்ந்துள்ளது.

“ஜனநாயக முறைப்படி நடைபெறும் கனடா நாட்டு தேர்தலில் ஏஐ டூல்களை சீனா பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதே போல கனடாவில் வசிக்கும் பல்வேறு சமூகங்கள் மற்றும் நாட்டின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடும் நோக்கமும் அதற்கான திறனையும் இந்திய அரசாங்கம் கொண்டுள்ளது என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்” என சிஎஸ்ஐஎஸ் அமைப்பின் துணை இயக்குநர் வனேசா லாயிட் கூறியுள்ளார். இதற்கு இந்தியா மற்றும் சீனா தரப்பில் இருந்து இன்னும் பதில் எதுவும் தரப்படவில்லை.

அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை கனடா எதிர்கொண்டுள்ள நிலையில் அடுத்த மாதம் 28-ம் தேதி அங்கு தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here