புதுக்கடை அருகே கைசூண்டி சந்திப்பில் இருந்து தேங்காப்பட்டணம் ஜங்ஷன் வரை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் ரோட்டில் இரு ஓரங்களிலும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் நட்ட மரங்கள் உள்ளன. இதுவரை சாலையில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்து விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மரங்களை அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் அனந்தமங்கலம் அருகே ரோட்டோரத்தில் நின்ற மரம் திடீரென சரிந்து வீட்டின் மேல் விழுந்தது. வீட்டிலிருந்த கிருஷ்ணன் என்பவரின் தலையின் மேல் ஆஸ்பெஸ்டாஸ் சீட் உடைந்து விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் வில்சன் என்பவர் கடையின் மேலும் மரம் முறிந்து விழுந்ததில் கடையும் சேதமடைந்தது. இதை கண்ட அப்பகுதியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு புதுக்கடை இன்ஸ்பெக்டர் மாரியப்பன், கிராம அதிகாரி ஜான் ஜவகர், வருவாய் துறை அதிகாரி விக்னேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் நிதி வழங்கப்படும் எனவும் புதிய வீடு கட்டித் தரப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் மரங்கள் வெட்டப்பட்டு அப்புறப்படுத்தும் பணி நடந்தது.