அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் ஏமாற்றம்: மார்ச் 23-ம் தேதி உண்ணாவிரதம்

0
156

தமிழக பட்ஜெட் தொடர்பாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் சு.ஹரிசங்கர்: அரசு ஊழியர்கள் தொடர்பாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை பொய்யாகிவிட்டது. 2026-2027 பட்ஜெட்டில் வெளியிட வேண்டிய சரண் விடுப்பு சலுகை அறிவிப்பை தற்போது வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்-ஆசிரியர் சமூகத்தை திமுக அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன்: தமிழக பட்ஜெட் அறிவிப்புகள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளன. ஈட்டிய விடுப்பை சரண் செய்வதற்கான அறிவிப்பு 1.4.2026 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்பது

ஏமாற்றம் அளிக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன்: அரசுப் பணிகளில் 40 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,562 பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் ஆகிய அறிவிப்புகளை வரவேற்கிறோம். அதேநேரத்தில், அரசு ஊழியர்கள் 15 நாள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து ஊதியம் பெறும் திட்டம் 1.4.2026 முதல் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை மாற்றி 1.1.2025 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மார்ச் 23-ல் உண்ணாவிரதம்: ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் ஒருங்கிணைப்பாளர்கள் அ.மாயவன், இரா.தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். “தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 23-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அப்போதும் நடவடிக்கை எடுக்காவிட்டால், மார்ச் 30-ம் தேதி கூடி, அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்’’ என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here