கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் 400 சிறுமிகள் லவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர் பி.சி.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டம் பாலா நகரில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில பாஜக மூத்த தலைவர் பி.சி.ஜார்ஜ் பேசியதாவது:
கோட்டயம் மாவட்டம், மீனாச்சல் வட்டத்துக்குட்பட்ட சுமார் 400 சிறுமிகள் லவ் ஜிகாத் வலையில் (மத மாற்றம் செய்து திருமணம் செய்தல்) சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 41 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய 25 வயது வரை காத்திருக்கின்றனர். 24 வயதுக்கு முன்பே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகள் 18 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால், படிப்புக்காகவும் அவர்களுடைய வருமானத்தை எதிர்பார்த்தும் கிறிஸ்தவர்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவருடைய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜனவரி 6-ம் தேதி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மத ரீதியாக சர்ச்சை கருத்து தெரிவித்ததாகவும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் ஜார்ஜ் மீது கேரள போலீஸார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு கடந்த வாரம் ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.