ஜெயலலிதாவுடன் நடிக்கும் திட்டம் இருந்தது என அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் மரியாதை செலுத்த வந்த நடிகர் ரஜினிகாந்த் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா, அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்று, ஜெயலலிதா உருவப்படுத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்குமாறு ஜெ.தீபா அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று இந்த விழாவில் பங்கேற்க வந்திருக்கிறேன். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு நான் இன்று 4-வது முறையாக வந்திருக்கிறேன். 1977-ம் ஆண்டு அவரை பார்ப்பதற்காக முதன்முறையாக போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்தேன். ஜெயலலிதாவும், நானும் இணைந்து நடிப்பதாக ஒரு திட்டம் இருந்தது. அப்போது, என்னை பார்க்க வேண்டும் என சொல்லி இருந்தார். அதற்காக முதன்முறையாக ஜெயலலிதாவின் இல்லத்துக்கு வந்தேன். 2-வது முறையாக ராகவேந்திரா திருமண மண்டப திறப்பு விழாவுக்காக ஜெயலலிதாவை அழைக்க வந்திருந்தேன். 3-வது முறையாக எனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க இங்கு வந்திருந்தேன். 4-வது முறையாக அவரது பிறந்தநாளில், அவருக்கு மரியாதை செலுத்த வந்திருக்கிறேன். அவருடனான மகிழ்ச்சியான இனிய நினைவுகளுடன் நான் இருந்து செல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.













