‘துரோகியின் பிடியில் இருந்து அதிமுகவை மீட்டெடுப்போம்’ என்று ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, காமராஜர் சாலை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவப்படத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் நொச்சிகுப்பம் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்று 30 ஆண்டுகள் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் அதிமுகவுக்கு வந்த சோதனைகளை எல்லாம் வென்று யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுகவை மாற்றினார். ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய திட்டங்கள், சாதனைகளை தொண்டர்கள் எண்ணிப் பார்க்கின்றனர். மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணமாக உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் அரசியல் சூது, சூழ்ச்சி, வஞ்சனை, நம்பிக்கைத் துரோகம் நடந்தது. 11 தேர்தல்களில் தோல்வி அடைந்தது. இவை எல்லாவற்றுக்கும் காரணம் ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று அடம் பிடித்ததுதான்.
மக்களால் போற்றப்படும் இயக்கமாக எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை வளர்த்தெடுத்தார்கள் அந்த நிலை மீண்டும் வரவேண்டும் என தொண்டர்கள் எண்ணுகின்றனர். அவர்களின் எண்ணம் ஈடேற வேண்டும் என்பதால் நாங்களும் தர்மயுத்தம் நடத்தி வருகிறோம். தொண்டர்களின் விருப்பம் கட்சி இணைய வேண்டும் என்பதுதான்.
துரோகியின் பிடியிலிருந்து அதிமுகவை மீட்டெடுத்து, மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அடுத்த ஆண்டு அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.













