கனடாவில் தரையிறங்கிய விமானம் கவிழ்ந்து 18 பேர் காயம் – விபத்து நடந்தது எப்படி?

0
291

கனடாவின் டொராண்டோவில் உள்ள பியர்சன் விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் பயணித்த 80 பேரும் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என விமான நிலையத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 76 பயணிகள் மற்றும் நான்கு விமான பணியாளர்களுடன் மினியாபோலிஸிலிருந்து வந்த விமானம் அந்த நாட்டு நேரப்படி திங்கள்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில் ஓடுபாதையில் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கும் போது ​​மணிக்கு 65 கி.மீ வேகத்தில் பனி வீசிக் கொண்டிருந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளன. அதில் விமானம் தலைகீழாக விழுந்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பயணித்த பயணிகள் வெளியேறும் காட்சிகளும், தீயை தீயணையப்பு படை வீரர்கள் அணைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒரு குழந்தை உட்பட 18 பேர் இதில் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் வெப்பநிலை மைனஸ் 8.6 டிகிரி செல்சியஸ் என இருப்பதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மாதிரியான விபத்து மிகவும் அரிதானது என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விமானம் புறப்படும் போது இந்த வகையிலான விபத்து இரண்டு முறை நடந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

கடைசியாக கடந்த 2005-ல் பியர்சன் விமான நிலையத்தில் பெரிய அளவில் விமான விபத்து ஏற்பட்டது. அப்போது பாரிஸில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும் போது பாதையை விட்டு விலகியதால் தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும் அதில் பயணித்த அனைவரும் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here