தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து, கா.அண்ணாதுரையை திமுக தலைமை அண்மையில் விடுவித்தது. இது தொடர்பாக ‘தெறிப்பது நிஜம்’ பகுதியில் ‘அண்ணாவை கண்டுகொள்ளாத அண்ணாதுரை’ என்ற தலைப்பில் 15.2.25-ல் செய்தி வெளியானது.
அந்த சமயத்தில் அண்ணாதுரை நமது அழைப்பை எடுக்காததால் அவரது கருத்தை நம்மால் கேட்க முடியவில்லை. செய்தி வெளியான பிறகு நம்மைத் தொடர்பு கொண்டு பேசிய அண்ணாதுரை, “பட்டுக்கோட்டையில் திமுக-வுக்கு கட்சி அலுவலகம் இல்லாததால் தான் நான் தனியாக அலுவலகம் திறந்தேன். அண்ணா நினைவு நாளில் ஒன்றிய திமுக சார்பில் மாலை அணிவிப்பு நிகழ்ச்சி வைத்திருந்ததால் நான் அங்கு செல்லாமல் எனது அலுவலகத்திலேயே அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினேன்.
அதிராம்பட்டினத்தில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் இருப்பதால் திமுக தலைவரின் எண்ணப்படி அங்கே இஸ்லாமியர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் பொறுப்பு கிடைக்காதவர்கள் என்மீது வீண்பழி சுமத்தினர். ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் அங்கு திமுக-வுக்கு அதிகப்படியான வாக்குகளை வாங்கிக் கொடுத்துள்ளேன்.
புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் இடத்தின் அருகே எனது பெயர் கொண்ட வேறு ஒருவரின் இடம் இருப்பதை தவறாக எனது இடம் என்று கூறியுள்ளனர். அதேபோல், விவசாய நிலத்துக்கு மண் எடுத்த விவகாரத்தில் டிஎஸ்பி-யை போனில் மிரட்டியதாக சொல்லப்படும் விஷயத்தில் முழு ஆடியோவையும் வெளியிடாமல், நான் பேசியதை மட்டுமே வெளியிட்டு என் பெயரை கெடுத்தனர்.
நான் மாவட்டச் செயலாளராக இருப்பது திமுக-வில் சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் தான் என்மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். எதற்கு என்னை பொறுப்பிலிருந்து விடுவித்தனர் என எனக்கே தெரியவில்லை. இருப்பினும் கட்சித் தலைவரின் கட்டளைப்படி செயல்பட்டு வருகிறேன்” என்றார்.