சாத்தூரில் மகனுக்கு சீட்..! – கைகூடுமா கேகேஎஸ்எஸ்ஆர் அண்ணாச்சியின் கணக்கு?

0
126

திமுக-வில் இனி வரும் காலம் உதயநிதியின் காலமாகத்தான் இருக்கும் என்பதால் திமுக முக்கிய தலைகள் பலரும் தங்களுக்குப் பதிலாக தங்களது வாரிசுகளை முன்னிறுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அண்ணாச்சியும் தனது மகன் ரமேஷை 2026 சட்டப் பேரவை தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறார்.

​சாத்தூர் ராமச்​சந்​திரன் என அழைக்​கப்​படும் அமைச்சர் கே.கே.எஸ்​.எஸ்​.ஆர்​.​ராமச்​சந்​திரன் எம்ஜிஆர் அமைச்​சர​வையில் இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்​தவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலி​தாவுக்கு பக்கபலமாக நின்றார். ஆனால், ஒருகட்​டத்தில் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் திருநாவுக்​கரசர் தொடங்கிய எம்ஜிஆர் அண்ணா திமுக-வில் இணைந்​தார். பிறகு திமுக-வில் இணைந்த ராமச்​சந்​திரனுக்கு 2006-ல் போட்டியிட வாய்ப்​பளித்த கருணாநிதி, அவரை சுகாதா​ரத்​துறைக்கு அமைச்​ச​ராக்​கி​னார்.

அந்தக் காலத்தில் தென்மாவட்ட திமுக-​வினர் யாரும் அழகிரிக்கு தலைவணங்​காமல் இருக்க முடியாது. ஆனால், அதற்கு விதிவிலக்காக இருந்த ராமச்​சந்​திரன், கடைசி வரை அழகிரி வீட்டுப் பக்கம் போகாமல் இருந்​தார். அதனால், ராமச்​சந்​திரன் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்​பிலிருந்து தூக்கப்​பட்டு கைத்தறித் துறைக்கு அமைச்சரான வரலாறும் உண்டு.

இதுவரைக்கும் சாத்தூர், அருப்​புக்​கோட்டை, விளாத்​தி​குளம் என 9 தேர்தல்​களில் வென்றிருக்கும் ராமச்​சந்​திரன், இப்போது வருவாய்த்​துறைக்கு அமைச்​ச​ராகவும் இருக்​கிறார். வயது முதிர்வு, சர்ச்சைப் பேச்சுகள் காரணமாக சாத்தூ​ராருக்கு இலாகா மாற்றம், அமைச்சரவை யிலிருந்து நீக்கம் என்றெல்லாம் கசிந்த செய்திகளை எல்லாம் பொய்யாக்கி முதல்​வரின் நம்பிக்கைக்​குரிய அமைச்​சர்​களில் ஒருவராக தொடர்​கிறார்.

இவரது மகன் ரமேஷ் 2016-ல், “விருதுநகர் திமுக-வில் உழைப்​பவர்​களுக்கு மாரியாதை இல்லை” என பழிபோட்டு​விட்டு அதிமுக-வில் இணைந்து தந்தைக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்​தார். ஆனால், அடுத்த சில மாதங்​களிலேயே தந்தையோடு சமாதானமாகி மீண்டும் திமுக-வுக்கு யுடர்ன் அடித்​தார். இப்போது இவரைத்தான் தனது அரசியல் வாரிசாக கொண்டுவர பிரயத்​தனப்​படு​கிறார் ராமச்​சந்​திரன்.

இதுகுறித்து பேசிய விருதுநகர் திமுக நிர்வாகிகள், “கடந்த முறையே தனக்கு சீட் கிடைக்கும் என ரமேஷ் எதிர்​பார்த்​தார். ஆனால், அது நடக்க​வில்லை. உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்​ச​ரானதும் கட்சியில் புதிதாக உருவாக்​கப்பட்ட விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவுக்கு மாவட்ட அமைப்​பாளராக ரமேஷ் நியமிக்​கப்​பட்​டார். தொலைநோக்​குடனேயே மகனை இந்த இடத்தில் உட்கார​வைத்தார் சாத்தூ​ரார்.

இப்போது, அவரால் வரமுடியாத நிகழ்ச்​சிகளில் எல்லாம் அவர் சார்பில் ரமேஷ் தான் பங்கெடுக்​கிறார். தனக்கு 6 முறை வெற்றியைத் தந்த சாத்தூர் தொகுதியில் இம்முறை மகனை நிறுத்தி ஜெயிக்​க​வைத்துவிட வேண்டும் என்பது தான் தற்போது சாத்தூ​ராரின் ஒரே சிந்தனை.

அதற்கான முன்னேற்​பாடு​களையும் அவர் செய்து வருகிறார். சாத்தூரார் தொடங்கிய ‘தங்கக் கலசம்’ எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தில் இருந்​தவர்கள் தான் இப்போது விருதுநகர் மாவட்ட அதிமுக-வில் முக்கிய பொறுப்பு​களில் உள்ளனர். மகனுக்கு சீட் கிடைத்தால் இவர்களை வைத்து எப்படியும் மகனை கோட்டைக்கு அனுப்​பி​விடலாம் என்பது அண்ணாச்​சியின் கணக்கு” என்றனர்.

அப்பா உங்களை சாத்தூருக்கு தயார்​படுத்​துக்​கிறாரா என்று ரமேஷிடம் கேட்டதற்கு, “தலைமை உத்தரவுப்படி கட்சி பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்​பாளர் என்ற முறையில் மாவட்டம் முழுவதும் இளைஞர்​களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்​பட்டு வருகிறது. மற்றபடி நான் தேர்தலில் போட்டி​யிடுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்” என்றார். தலைமை என்ன ​முடிவுசெய்​கிறது என்று ​பார்​க்​கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here