பெண் நீதிபதி மீது செருப்பு வீசிய குற்றவாளி: தெலங்கானாவில் சம்பவம்

0
221

பெண் நீதிபதி மீது குற்றவாளி ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலத் தலைநகர், ஹைதராபாத் செர்லோபல்லி மத்திய சிறையில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் இருப்பவர் கரண்சிங் என்கிற சர்தார் சீமகுர்த்தி (22).

இவர், கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி, ஹைதராபாத் வெளி வட்டார சுற்றுப்பாதை பகுதியில், காரில் சென்றவர்களை வழிமறித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒருவரை கொலை செய்து விட்டு தப்பி தலைமறைவானார்.

மறுநாள் கரண்சிங்கை கைது செய்ய சென்ற 2 போலீஸாரை கத்தியால் தாக்கி விட்டு ஓட முயன்றார். அதன் பின்னர் கரண்சிங்கை போலீஸார் கைது செய்தனர். இவர் மீது கொலை, வழிப்பறி, போலீஸார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்கு விசாரணை ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. போலீஸார் மீது கொலை முயற்சி வழக்கில் கரண்சிங்குக்கு கடந்த 12-ம் தேதி பெண் நீதிபதி ஆயுள் தண்டனை விதித்தார். இதனை தொடர்ந்து வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் சரண் சிங்கை விசாரிக்க அதே நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் போலீஸார் சரண் சிங்கை ஆஜர்படுத்தினர்.

அப்போது அதே பெண் நீதிபதி சரண்சிங்கின் வழக்கை விசாரித்தார். இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குற்றவாளி சரண்சிங், திடீரென தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி பெண் நீதிபதி மீது வீசினார். இதை யாரும் எதிர்பார்க்க வில்லை. உடனே நீதிபதி சற்று விலகியதால் செருப்பு அவர் மீது படவில்லை. உடனே அங்கிருந்த போலீஸாரும், பாதுகாவலர்களும் சரண்சிங்கை பிடித்து அங்குள்ள ஒரு அறைக்கு இழுத்துச் சென்றனர்.

இதற்குள் அங்குள்ள வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குற்றவாளி சரண்சிங்கை சரமாரியாக தாக்கினர். அதன் பின்னர் போலீஸார் சரண்சிங்கை மீட்டு மீண்டும் செர்லோபல்லி சிறையில் அடைத்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி, ரங்காரெட்டி மாவட்ட தலைமை நீதிபதி சசிதர் ரெட்டியிடம் நடந்த விஷயங்களை கூறி புகார் தெரிவித்தார். அதன்பேரில் மற்றொரு வழக்கும் சரண்சிங் மீது போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

பெண் நீதிபதி ஒருவரை, விசாரணை குற்றவாளி செருப்பால் தாக்கிய சம்பவத்தை நீதிபதிகள் சங்கம் கண்டித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here