2024 மக்களவைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி கிட்டும் என அதிமுக தீர்க்கமாக நம்பிய தொகுதி கள்ளக்குறிச்சி. அப்படிப்பட்ட தொகுதியில் திமுக வலுவான வேட்பாளரை தேடிப்பிடித்து நிறுத்தும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், பேரூர் கழகச் செயலாளரான மலையரசனை நிறுத்தியது திமுக.
இவரை அடையாளம் காட்டியவர் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன். புதுமுகம் என்றபோதும், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார் மலையரசன். இப்போது, மலையரசனை முடக்கிப் போட முயற்சிப்பதாக வசந்தம் கார்த்திகேயனுக்கு எதிராகவே வருத்தங்கள் வட்டமடிக்கின்றன.
எம்பி-யாக வெற்றிபெற்று எதைச் சாதித்தோம். இதற்கு பேசாமல் பேரூர் கழகச் செயலாளராக இருந்து கொண்டு காண்ட்ராக்ட் பணிகளை பார்த்து நாலு காசு பார்த்துவிட்டுப் போயிருக்கலாமே என்ற மனநிலையில் மலையரசன் இப்போது இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.இதுகுறித்துப் பேசிய அவர்கள், “அரசு நிகழ்ச்சிகளில் எம்பி என்ற முறையில் மலையரசனுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்துப் பேசவிடுவதில்லை. அவருக்கான இருக்கையையே மேடையில் ஒரு ஓரமாகத்தான் போடுகிறார்கள்.
கட்சிக் கூட்டங்களில் அவரை மேடை ஏறவிடாமல் தடுத்த நிகழ்வுகளும் உண்டு. அக்டோபரில் கள்ளக்குறிச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் வந்தார். அவரைச் சந்திக்க ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார் மலையரசன். அப்போது வசந்தம் கார்த்திகேயனும், வடக்கு மாவட்டச் செயலாளரான உதயசூரியன் எம்எல்ஏ-வும் உள்ளே இருந்திருக்கிறார்கள். வெளியில் இருந்தவர்கள் மலையரசனை உள்ளே விட மறுத்திருக்கிறார்கள்.
அதனால், அறைக்கு வெளியே காத்திருந்த மலையரசன், உதயநிதி வெளியே வந்த பிறகு நினைவுப் பரிசை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, மேடைகளில் மலையரசனை மக்களவை உறுப்பினர் என்று சொல்லாமல் வெறுமனே மலையரசன் என்று மட்டும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்” என்றார்கள்.
சொந்தக் கட்சிக்குள்ளேயே, தான் உதாசீனப்படுத்தப்படுவதை மலையரசனால் எதிர்த்துக் கேட்கமுடியாத நிலையில், அதிமுக-வினர் அவருக்காக வக்காலத்து வாங்கிப் பேசி வருகிறார்கள். இவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்ற அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு அண்மையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசும்போது, “என்னை எதிர்த்து வெற்றிபெற்று விட்டீர்கள்.
ஆனால், உங்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லையே. அரசு நிகழ்ச்சிகளில் ஏன் உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்கிறீர்கள்? எதற்காக அடிமையாக இருக்கிறீர்கள்? இதற்குத்தான் உங்களை மக்கள் வெற்றிபெறச் செய்தார்களா? உங்களுக்கு வக்காலத்து வாங்க நான் இருக்கிறேன். தைரியமாக செயல்படுங்கள்” எனப் பேசினார்.
வசந்தம் கார்த்திகேயன்
கட்சிக்குள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் குறித்து மலையரசனிடம் கேட்டதற்கு, “‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை’ என்ற வள்ளுவன் காட்டிய வழியில் பயணிக்கின்றேன். கார்த்திகேயன் எனக்கு மாவட்டச் செயலாளர். கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவது தொண்டனுக்கு அழகல்ல.
மலையரசன்
நான் பாரம்பரிய திமுக-காரன். எதையும் தாங்கும் இதயம் இது. எனது மாமனார் தியாகராஜனின் கட்சிப் பணிகள் குறித்து அண்ணா, கலைஞர், முதல்வர் உள்ளிட்டோர் அறிவர். 2016 தேர்தலில் கார்த்திகேயனின் வெற்றிக்கு நான் உழைத்தேன். 2024-ல் எனது வெற்றிக்கு அவர் பங்களித்திருக்கிறார். கட்சி நலனைக் கருத்தில் கொண்டு எதையும் அதிகம் பேச விரும்பவில்லை” என்றார்.
மலையரசனை நீங்கள் புறக்கணிக்கிறீர்களாமே என்று வசந்தம் கார்த்திகேயனிடம் கேட்டதற்கு, “அவர் எங்கள் கட்சி வேட்பாளராக அறிவித்தது. அப்புறம் தான் மற்றவை. அவரை வெற்றிபெறச் செய்ததில் எனக்கும் பங்குண்டு. அவருக்கான மரியாதையை எங்கும் நான் விட்டுக்கொடுத்ததில்லை; விட்டுக்கொடுக்கவும் மாட்டேன். துணை முதல்வர் வந்தபோது, அவரை நாங்கள் இருவரும் சேர்ந்து தான் வரவேற்றோம். அப்படி இருக்கையில் அவரை நான் புறக்கணிப்பதாகக் கூறுவதெல்லாம் அதிமுக-வினர் அவிழ்த்துவிடும் கட்டுக்கதை” என்றார்.













