பாசத்தை பொழிவதாக திமுக மீது குற்றச்சாட்டு: அதானியை முதல்வர் ரகசியமாய் சந்தித்தது ஏன்? – சீமான் கேள்வி

0
229

அதானி மீது திமுக பாசத்தை பொழிவதாகவும், கவுதம் அதானியை முதல்வர் ஸ்டாலின் ரகசியமாகச் சந்தித்தது பேசியது ஏன்? என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் நண்பரும், முன்னணி தொழிலதிபருமான கவுதம் அதானி, ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேலாக லஞ்சம் கொடுத்து அமெரிக்காவில் முதலீடுகளை திருடியது அம்பலமாகிய நிலையில், அந்நாட்டு அரசு அதானி உள்ளிட்டோரை கைதுசெய்ய உத்தரவிட்டிருப்பது மொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனிய செய்திருக்கிறது.

இதில் தொடர்புடைய மத்திய சூரியஒளி மின்னுற்பத்திக் கழகத்துடன் தமிழக மின்சார வாரியமும் 1000 மெகாவாட் மின்சாரத்தை பெற 2021-ம் ஆண்டில் ஒப்பந்தமிட்டுள்ளது. இதற்கு பின்புலத்தில் அதானி குழுமம் தமிழக மின்சார வாரியத்துக்கு கோடிகளை கொட்டியிறைத்திருப்பதும் அமெரிக்க அரசின் குற்றச்சாட்டின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.

அந்தவகையில் திமுகவின் ஆட்சி அமெரிக்கா வரை சென்று சந்தி சிரித்து நிற்கிறது. எல்லாவற்றுக்கும் அறிக்கைப்போர் தொடுக்கும் முதல்வர் ஸ்டாலின் இதில் அடக்கி வாசிப்பது ஏன்? அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிலைப்பாடு என்ன? கடந்த ஜூலை 10-ம் தேதி தமிழகத்துக்கு வந்த கவுதம் அதானி, முதல்வர் ஸ்டாலினை ரகசியமாக சந்தித்துச் சென்றுள்ளார்.

அந்த சந்திப்பையே வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு என்ன பேசப்பட்டது? கவுதம் அதானியின் மகன் கரன் அதானி, துணை முதல்வர் உதயநிதியின் பதவியேற்புக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். இவ்வாறு திமுக அரசுக்கும் கவுதம் அதானிக்கும் இடையே அப்படி என்ன ரகசிய உறவு? அந்தவகையில் அதானி மீது பாசத்தை பொழிவதிலும், அவரை காப்பாற்றுவதிலும் பாஜகவோடு திமுக போட்டிபோடுவது வெட்கக்கேடானது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here