ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் நேற்று பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் இருந்து ஒரு பேருந்து பிஹார் தலைநகர் பாட்னா நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்டது. இதில் சுமார் 50 பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டம் கோர்ஹர் பகுதியில் ஒரு வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்தனர். சுமார் 10 பேர் காயம் அடைந்தனர்.
இதுபோல் உ.பி.யில் நேற்று நிகழ்ந்த மற்றொரு சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். உ.பி.யின் அலிகர் மாவட்டம் தப்பால் பகுதியில் அமைந்துள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று அதிகாலையில் லாரி மீது பேருந்து மோதியது. கிழக்கு உ.பி.யின் ஆசம்கர் நகரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற இந்தப் பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் லாரி மீது மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இவ்விரு விபத்துகள் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.