புதுக்கடை அருகே உள்ள பார்த்திபுரம் பகுதியில் மிகவும் பழமையான பார்த்தசாரதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் காம்பவுண்ட் சுவர் ஏறி குறித்து கருவறையில் இருந்த ஐம்பொன் சிலை மற்றும் பொருட்களை திருடி சென்றனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டும் என்றும் கோவிலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ள வேண்டும் என இந்து அறநிலையத்துறை, தொல்லியல் துறையை கேட்டு முஞ்சிறை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கடை பஸ் நிலையத்தின் முன்பு நேற்று (19-ம் தேதி) மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார குழு தலைவர் எஸ்.கலின் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் அலெக்ஸ் தொடங்கி வைத்தார். போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் நிறைவுரையாற்றினார்.