முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 107-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப் படத்துக்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 107-வது பிறந்த நாளையொட்டி தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சத்தியமூர்த்தி பவனில்.. பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தி உருவப் படத்துக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், மாநில துணைத் தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதையடுத்து தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அதேபோல சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் அதன் தலைவர் பி.எஸ்.புத்தன் தலைமையில் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.