விசிக துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏவின் மகன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
தென்சென்னை தெற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி புரவலர் சைதை எம்.எஸ்.மணி – எஸ்.கன்னிகா பேரனும், விசிக துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எம்ஏவின் மகனுமான மருத்துவர் பா.கவுதம் – மருத்துவர் இரா.கீர்த்தி திருமண விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்றது.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, துரை.ரவிக்குமார், எம்எல்ஏக்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், இ.பரந்தாமன், ஏஎம்வி. பிரபாகர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். நேற்று விசிக தலைவர் திருமாவளவன் தலைமையிலும், அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையிலும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
மணமக்களை வாழ்த்தி திருமாவளவன் பேசியதாவது: நான் சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதியில் தங்கி பயின்றபோது, என்னை ஊக்கப்படுத்தியவர் எஸ்.எஸ்.பாலாஜியின் தந்தை எம்.எஸ்.மணி. பாலாஜிபோலவே என்னையும் பிள்ளையாக ஏற்றுக் கொண்டு அன்பு காட்டியவர். அவரது மகன் எஸ்.எஸ்.பாலாஜி தற்போது விசிகவில் தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகிறார். சிறந்த ஆளுமையாகவும், முன்னணி பொறுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
சட்டப்பேரவையில் சரியான தரவுகளோடு விவாதித்து அமைச்சர்களிடம் பாராட்டு பெறுகிறார். இதெல்லாம் பெருமை தருகிறது. மணமக்கள் இருவருமே மெத்த படித்தவர்கள். எந்த பணி செய்தாலும் அரசியலிலும் பங்கேற்க வேண்டும். அரசியலில் அதிகாரத்தை தீர்மானிப்பவர்களாக வளர்ச்சி பெற வேண்டும்.
அப்படியொரு களத்தில் மணமக்கள் கவுதம் – கீர்த்தி ஆகியோரின் பங்கு இன்றியமையாதது. குழந்தை உள்ளிட்ட அனைத்து செல்வங்களையும் பெற்று மணமக்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பெரியகருப்பன், கோவி.செழியன், சாத்தூர் ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி, சேகர்பாபு, எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், மதிவேந்தன், ஜெகத்ரட்சகன் எம்.பி., தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் சிந்தனைச்செல்வன், ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, அப்துல் சமது, வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மணமக்களின் தாத்தா – பாட்டியான சைதை எம்.எஸ்.மணி, எஸ்.கன்னிகா, மணமகனின் பெற்றோர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ – டி.கீதா மற்றும் உறவினர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
விசிக முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, துணை பொதுச் செயலாளர்கள் கலைவேந்தன், வன்னியரசு, கனியமுதன், தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவாரா, தகடூர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.