போதைப் பொருளை பயன்படுத்தும் 7% இந்தியர்கள்: மத்திய அமைச்சர் அமித் ஷா கவலை

0
50

இந்தியாவில் 7 சதவீதம் பேர் போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். அவர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

‘போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு’ என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று முன்தினம் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார். பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வடஇந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பது குறித்து மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த மாநிலங்களின் முதல்வர்கள் காணொலி வாயிலாக மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டின் இறுதியில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: கடந்த 2024 – ம் ஆண்டில் நாடு முழுவதும் ரூ.16,914 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நேரத்தில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க மத்திய அமைப்புகள், மாநில காவல் துறைகள் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும்.

வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த கனவை நனவாக்க போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது அவசியம் ஆகும். இதற்காக கடந்த 10 ஆண்டுகளில் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க அதிதீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நாடு முழுவதும் சுமார் ரூ.8,600 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டு உள்ளன.

பல்வேறு தீவிரவாத குழுக்கள் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக மாநில காவல் துறைகள் விழிப்புடன் இருக்க வேண்டும். போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய தீவிரவாத குழுக்களை வேரறுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் காஷ்மீர், பஞ்சாப், குஜராத், உத்தர பிரதேச காவல் துறைகள் மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்பு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகின்றன. அந்த மாநில காவல் துறைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

போதைப்பொருட்கள் கடத்தலுக்கு கிரிப்டோகரன்சி முறையில் பணப் பரிமாற்றம் நடைபெறுகிறது. இதை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது. சர்வதேச அளவிலான ஆன்லைன் சந்தைகள் மூலம் போதைப்பொருட்கள் வாங்கப்பட்டு, இந்தியாவுக்கு கடத்தப்படுகிறது. அண்மைகாலமாக போதைப் பொருட்கள் கடத்தலுக்கு ட்ரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை கண்டறிவது மிகப்பெரும் சவாலாக உள்ளது. நாட்டின் சில ஆய்வகங்களில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மாநில அரசுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். ஆய்வகங்களின் நடவடிக்கைகளை மாநில காவல் துறைகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

இந்தியாவில் சுமார் 7 சதவீதம் பேர் போதைப்பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும். போதைப்பொருள் பழக்கம் அடுத்த தலைமுறையை அழிக்கும் புற்றுநோய் ஆகும். இந்த சமூக அவலத்தை நாம் தோற்கடிக்க வேண்டும். இப்போதே போதைப்பொருட்கள் தடுப்பில் அதிதீவிர கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும். போதையில்லாத இந்தியாவை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here