குஜராத்தின் அகமதாபாத் நகரில் போலி ஆவணங்களுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் நாட்டின் பல பகுதிகளில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு போலி ஆதார் அட்டைகள், பான் அட்டைகளை ஒரு கும்பல் வழங்கி வருகிறது. இவ்வாறு போலி ஆவணங்களுடன் இந்தியாவில் பல இடங்களில் தங்கியிருக்கும் வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். புனே அருகில் உள்ள ரஞ்சன்கான் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 21 பேரை புனே போலீஸார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இவர்களில் 15 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள், 2 பேர் திருநங்கைகள்.
இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 50-க்கும் மேற்பட்டோரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது.