மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.
கயானாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 36 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக ஜான் கேம்பல் 43, அமிர் ஜாங்கூ 24 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி அதன் பின்னர் மேற்கொண்டு 75 ரன்களை சேர்ப்பதற்குள் 10 விக்கெட்களையும் கொத்தாக தாரைவார்த்தது.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜெய்டன் லெனாக்ஸ் 8 ஓவர்களை வீசி 19 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். 139 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து 32.4 ஓவர்களில 5 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணியின் 400-வது வெற்றியாக இது அமைந்தது. டாம் லேதம் 37, டேரில் மிட்செல் 28, வில் யங் 28, மைக்கேல் பிரேஸ்வெல் 24, ஹென்றி நிக்கோல்ஸ் 17 ரன்கள் சேர்த்தனர்.
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 3-வது போட்டி நாளை (16-ம் தேதி) நடைபெறுகிறது.















