திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அருகே உள்ள கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 54 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்கீழ், நேற்று ரவா கிச்சடியும், சாம்பாரும் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட ஒரு மாணவியின்தட்டில் பல்லி இறந்துகிடந்தது. இதனால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சிறிது நேரத்தில் கிச்சடி சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 40 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்
சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு முழு உணவை சாப்பிட்ட 18 மாணவ, மாணவிகள் உட்பட 40 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 39 பேர் சிகிச்சை முடிந்து நேற்று மாலை வீடு திரும்பினர். 5-ம் வகுப்பு மாணவியான ஆதிலட்சுமி (10) என்பவர் மட்டும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தகலறிந்த திருவள்ளூர் ஆட்சியர் கவிதா, திருவள்ளூர் எம்எல்ஏ அருண்குமார் ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். தொடர்ந்து மருத்துவமனை, பள்ளியில் இதுகுறித்து ஆட்சியர் நேரில் விசாரணை, ஆய்வில் ஈடுபட்டார்.
அப்போது ஆட்சியர் கவிதா கூறுகையில், “இச்சம்பவத்துக்கு சமையலரின் கவனக்குறைவுதான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. சமைக்கும்போது மூடி சமைத்திருந்ததால் இவ்வாறு நடந்திருக்காது.
உணவைப் பரிமாறும் முன் ஒருமுறை பார்த்திருந்தால், மாணவ, மாணவிகள் உணவு சாப்பிடுவதைத் தவிர்த்திருக்க முடியும். இனி பள்ளிகளில் உணவு சமைக்கப்படும்போது, அதனை ஆசிரியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்படும்” என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக, அப்பள்ளியின் சமையல் பணியாளர்கள் ஆர்த்தி, தனலட்சுமி ஆகியோர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலக்கண்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் (செப்.23) பல்லி விழுந்துகிடந்த காலை உணவை உட்கொண்ட 11 மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அதேபோல நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அனைத்து அரசுப்
பள்ளிகளிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு மாணவர்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
