38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கியது. 38 அணிகளைச் சேர்ந்த10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த தொடர் நேற்று நிறைவு பெற்றது. இதில் சர்வீசஸ் அணி 68 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. மகாராஷ்டிரா 54 தங்கம், 71 வெள்ளி, 73 வெண்கலம் என 198 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், ஹரியானா 48 தங்கம், 47 வெள்ளி, 58 வெண்கலம் என 153 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. தமிழ்நாடு அணி 27 தங்கம், 30 வெள்ளி, 35 வெண்கலம் என 92 பதக்கங்களுடன் 6-வது இடத்தை பிடித்தது. போட்டியை நடத்திய உத்தராகண்ட் 24 தங்கம், 35 வெள்ளி, 44 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் 7-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தது.
பாட்மிண்டனில் இந்தியா தோல்வி: ஆசிய கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடர் சீனாவில் கிங்டாவோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி சுற்றில் இந்தியா, ஜப்பானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிரஷ்டோ ஜோடி 13-21, 21-17, 13-21 என்ற செட் கணக்கில் ஹிரோகி மிடோரிகாவா, நட்சு சைட்டோ ஜோடியிடம் தோல்வி அடைந்தது. மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் மாளவிகா பன்சோத் 12-21, 19-21 என்ற செட் கணக்கில் மியாசாகியிடம் வீழ்ந்தார். தொடர்ந்து ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஹெச்.எஸ்.பிரனாய் 21-14, 15-21, 21-12 என்ற செட் கணக்கில் கென்டா நிஷிமோடாவிடம் தோல்வி அடைந்தார்.
சிவில் சர்வீசஸ் வாலிபால் போட்டி தொடக்கம்: அகில இந்திய சிவில் சர்வீசஸ் வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் பிரிவில் நேற்று ‘இ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி தலைமை செயலகம் அணி 2-0 என்ற கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது. ‘ஹெச்‘ பிரிவில் இமாச்சல் பிரதேசம் 2-0 என்ற கணக்கில் மத்திய பிரதேச அணியையும், ‘சி’ பிரிவில் சென்னை ஆர்எஸ்பி 2-0 என்ற கணக்கில் உத்தராகண்ட் அணியையும் ‘எப்’ பிரிவில் கேரளா 2-0 என்ற கணக்கில் தெலங்கானாவையும் வீழ்த்தின. முன்னதாக போட்டியை தமிழ்நாடு முதன்மை மாநிலக் கணக்காயர் (தணிக்கை-1), ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் தீபக் குமார், தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் தலைவர் ஜெயமுருகன், வாழ்நாள் தலைவர் அர்ஜூன் துரை, பொதுச் செயலாளர் மார்ட்டின் சுதாகர், தேர்வுக்குழு தலைவர் ஜெகதீசன், சென்னை மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.