பிஹார் அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் கலந்ததால் 34 மாணவர்கள் பாதிப்பு

0
23

பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் சமையல் உப்புக்கு பதிலாக சலவைப் பவுடர் கலக்கப்பட்டதால் 34 மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

பிஹாரின் நாளந்தா மாவட்டம், நூர்சராய் வட்டாரத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட பிறகு 34 குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். கூடுதல் உப்பு கேட்ட மாணவர்களுக்கு, சமையல்காரர் தவறுதலாக உப்புக்குப் பதிலாக டிடர்ஜென்ட் பவுடரைக் கொடுத்ததால் இந்தச் சம்பவம் நடந்தததாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

பாரசி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 17 சிறுமிகள் மற்றும் 17 சிறுவர்கள் என மொத்தம் 34 பேர் உணவு உட்கொண்ட பிறகு உடல்நலப் பாதிப்புகளுக்குள்ளாகி, பிஹார்ஷரிஃப் சதார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு அவர்கள் அனைவரும் நலமாகவும், ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியும் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் சைலேந்திர குமார் சிங், “ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட மதிய உணவில் சாதம் மற்றும் சோயாபீன்ஸ் – உருளைக்கிழங்கு கூட்டு ஆகியவை இருந்தது. உணவு சாப்பிடும்போது ​​பள்ளி சமையல்காரரின் பேத்தியான மாணவி ஒருவர் கூடுதல் உப்பு கேட்டார். அப்போது சமையல்காரர் தவறுதலாக உப்புக்குப் பதிலாக டிடர்ஜென்ட் பவுடரை கொடுத்துவிட்டார்.

இதனை தொடர்ந்து இன்னும் சில மாணவர்களும் கூடுதல் உப்பு கேட்டனர். அவர்களுக்கும் அதே டிடர்ஜென்ட் பவுடர் வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில், சில மாணவர்கள் தொண்டை மற்றும் வயிற்று வலி இருப்பதாக கூறினார்கள். இதனால் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்” என்றார்.

நேற்று மதியம் 12.30 மணிக்கு அந்தப் பள்ளியில் மொத்தம் 132 மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அவர்களில் 34 குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மதியம் 2.15 மணியளவில் அவர்கள் சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் பின்னர் பிஹார் அமைச்சர் ஷ்ரவண் குமார் மருத்துவமனைக்குச் சென்று குழந்தைகளை சந்தித்ததுடன், அவர்களுக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

சண்டி, நகர்நவுசா மற்றும் நூர்சராய் ஆகிய வட்டாரங்களில் உள்ள 206 பள்ளிகளில் பயிலும் சுமார் 23,000 குழந்தைகளுக்கு, ஏக்தா சக்தி அறக்கட்டளையின் மூலம் தினமும் மதிய உணவு வழங்கப்படுவதாக மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here