மார்த்தாண்டம் அருகே மினி டெம்போவில் கேரளத்துக்குக் கடத்திச் செல்ல முயன்ற 2,700 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய்யை வழங்கல்துறை அதிகாரிகள்வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குமாரி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதி வழியாக சந்தேகமளிக்கும் வகையில் வந்த 2 மினி
டெம்போக்களை நிறுத்த சைகை காட்டினர்.
ஆனால், வாகனங்களை நிறுத்தாமல் அதன் ஓட்டுநர்கள் ஓட்டிச் சென்றனர். இதையடுத்து, அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்றனர். மேல்புறம் பகுதியில் அந்த வாகனங்களை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தொடர்ந்து மினிடெம்போக்களை சோதனை செய்தபோது அதில் மீனவர்களின் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் 2,700 லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. வாகனத்துடன் மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகம் கொண்டு வந்தனர். தொடர்ந்து, மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
