நாள் முழுவதும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது.
நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றத்தை கேரள உயர்நீதிமன்றம், கொல்லம் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கி வைத்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.காவை, ராஜேஷ் பிண்டால் ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தின் இதர டிஜிட்டல் சேவைகளை தொடங்கிவைத்தனர். இந்த ஆன்லைன் நீதிமன்றம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நீதிமன்றத்தை 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். வழக்குப்பதிவு, வழக்கு அனுமதி, ஆஜராவது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படும்.
முதல் அமர்வு விசாரணைக்கு ஆன்லைன் நீதிமன்றத்துக்கு பொறுப்பு வகிக்கும் மாஜிஸ்திரேட் சூர்ய சுகுமாறன் தலைமை தாங்கினார். முதல்கட்டமாக செக் மோசடி வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன. இந்த நீதிமன்றத்தில் நாள் முழுவதும் எப்போது வேண்டுமானாலும், உலகில் எங்கிருந்தும் வழக்குகளை பதிவு செய்யலாம். இந்த நீதிமன்றத்தில், மனுதாரர் விரும்பினால் நேரில் ஆஜராகலாம். இல்லையென்றால் அனைத்து நடைமுறைகளும் ஆன்லைனிலேயே விரைவில் முடிந்து விடும். குற்றவாளிகளுக்கான சம்மன்கள் டிஜிட்டல் முறையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பப்படும். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுக்கு உத்திரவாத கையெழுத்திட்ட நபர்கள் தங்களின் ஜாமீன் மனுக்களையும் ஆன்லைனிலேயே தாக்கல் செய்யலாம். நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பது மற்றும் சட்டரீதியான தீர்வுகளை விரைவுபடுத்துவது ஆகியவைதான் இந்த ஆன்லைன் நீதிமன்றத்தின் நோக்கம்.
இந்த நீதிமன்றம் வழக்கு தொடுப்பவர்களுக்கும், வழக்கறிஞர்களும் வழக்கு விசாரணை நிலவரங்களை உடனுக்குடன் தெரிவிக்கும். இந்த ஆன்லைன் நீதிமன்றத்தில் எல்லா ஆவணங்களுமே டிஜிட்டல் முறையில்தான் தாக்கல் செய்ய வேண்டும். காகித ஆவணங்களக்கு இங்கு இடமில்லை. வழக்குகளை நீதிமன்றத்தின் இணையளத்தில் ஆன்லைன் மூலமே சமர்ப்பிக்க வேண்டும். இதனால் எங்கிருந்தும், எப்போதும் கொல்லம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யலாம். கொல்லம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுடன் இந்த ஆன்லைன் நீதிமன்றம் இணைந்து செயல்படும்.