அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத வகையில் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேபோரா ராஸ் மற்றும் ரோ கண்ணா தலைமையிலான அமெரிக்க எம்.பி.க்கள் 21 பேர் அதிபர் ட்ரம்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக உள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் செமிகண்டக்டர், சுகாதாரம் மற்றும் எரிசக்தி துறையில் இந்தியாவை நம்பி இருக்கின்றன. மேலும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவின் நட்பு தேவை. கூடுதல் வரி விதிப்பால் சீனா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா நெருங்கி வருகிறது. இது அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும். அத்துடன் அந்த நாட்டுடனான உறவை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.