தடை செய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யுஎன்எல்எப்) அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகளை மணிப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். கிழக்கு இம்பால் மாவட்டத்தின் வெவ்வேறு இடத்திலிருந்து இவர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த யுஎன்எல்எப் தீவிரவாதி ஒருவர் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து தீவிரவாதிகளின் பதுங்குமிடம் ஒன்றில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு வகை துப்பாக்கிகள், தோட்டாக்கள், ஒரு கையெறிகுண்டு மற்றும் ரூ.69,000 ரொக்கத்தை கைப்பற்றினர்.
இதுபோல் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் அவாங் லெய்காய் பகுதியில் யுஎன்எல்எப் அமைப்பின் மற்றொரு தீவிரவாதி கைது செய்யப்பட்டார். இவரும் இம்பால் மற்றும் அதைச் சுற்றிலும் அச்சுறுத்தி பணம் பறித்து வந்தார். இவரிடம் இருந்து ரூ.21,50,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.