மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீடுகளில் இருந்து 2.7 கிலோ தங்கம், 5.5 கிலோ வெள்ளி, 17 டன் தேன், பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மத்திய பிரதேச பொதுப் பணித் துறையில் தலைமை பொறியாளராக கோவிந்த் பிரசாத் மெஹ்ரா பணியாற்றினார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் ஓய்வு பெற்றார். இதன்பிறகு தலைநகர் போபாலில் உள்ள வீட்டில் அவர் வசித்து வந்தார். அவர் பணியில் இருந்தபோது பெருமளவில் ஊழல் செய்து கோடிக்கணக்கில் சொத்து குவித்திருப்பதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக மத்திய பிரதேச லோக் ஆயுக்தா போலீஸார் போபால் மற்றும் நர்மதாபுரம் பகுதிகளில் மெஹ்ராவுக்கு சொந்தமான 4 வீடுகளில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
இந்த வீடுகளில் இருந்து 2.7 கிலோ தங்க நகைகள். 5.5 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.35 லட்சம் ரொக்கம், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மெஹ்ரா தரப்பில் சைனி கிராமத்தில் 32 சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
சொகுசு வாகனங்கள்: மேலும் பிவிசி பைப் தயாரிக்கும் ஆலை, பல்வேறு பண்ணை வீடுகளும் அவரது குடும்பத்தினர் பெயர்களில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு பண்ணை வீட்டில் இருந்து 17 டன் தேன் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
மெஹ்ராவின் வீடுகளில் இருந்து ஏராளமான சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களின் மதிப்பு சில கோடிகளை தாண்டும் என்று தெரிகிறது. இதுகுறித்து லோக் ஆயுக்தா போலீஸார் கூறியதாவது:
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கோவிந்த் பிரசாத் மெஹ்ரா வீடுகளில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம். ஏராளமான சொத்து பத்திரங்களையும் கைப்பற்றி உள்ளோம். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.60 கோடி ஆகும். அடுத்தகட்டமாக மெஹ்ராவின் 2 மகன்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு லோக் ஆயுக்தா போலீஸார் தெரிவித்தனர்.