கடந்த 2 ஆண்டில் அசாமில் இருந்து 1,679 வங்கதேசத்தினர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த மக்கள் இந்தியாவின் மேற்குவங்கம், அசாம், வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். அங்கிருந்து இவர்கள் தென்மாநிலங்களுக்கும் ஊடுருவி வருகின்றனர். இதைத் தடுக்க மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அசாம் மாநில அரசு, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச மக்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வருகிறது.
இது தொடர்பாக அசாம் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த அசாம் அரசு உறுதிபூண்டு உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உத்தரவுகளை அசாம் அரசு கண்டிப்புடன் பின்பற்றுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் 2026-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரையிலான 2 ஆண்டு காலத்தில் அசாமில் இருந்து 1,679 வங்கதேச மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அவர்கள் வங்கதேசத்துக்கு பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.
சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும்போது மனிதாபிமான அடிப்படையில் அசாம் அரசு செயல்படுகிறது. மனித உரிமை மீறல்கள் முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு சர்மா தெரிவித்துள்ளார்.
