23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதில் 30 அணிகளைச் சேர்ந்த 1,476 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 155 நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் அதிக அளவிலான வீரர்கள் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும்.
இந்த போட்டியில் முன்னணி நட்சத்திரங்களான சுமித் ஆன்டில் (ஈட்டி எறிதல்), மனோஜ் சபாபதி (சக்கர நாற்காலி பந்தயம்), மனோஜ் சிங்கராஜ் (குண்டு எறிதல்), மாரியப்பன் தங்கவேலு (உயரம் தாண்டுதல்), முத்து ராஜா, ஹொகடோ சீமா (குண்டு எறிதல்), நவ்தீப் சிங் (ஈட்டி எறிதல்), யோகேஷ் கதுனியா (வட்டு எறிதல்) உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். இன்று மாலை 4 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் தமிழக துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.