அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் முதல் கட்டமாக 104 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த மாதம் 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்றார். அதன் பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஐ.நா அமைப்புகளில் இருந்து வெளியேறுவது, உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது, வங்கதேசம், பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவது, டிக்டாக் செயலிக்கு நிபந்தனை விதிப்பு என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார். அதன்படி, பிரேசில், மெக்சிகோ, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் குடிமக்கள் அவரவர் நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன்படி, சி-17 என்ற ராணுவ விமானத்தில் நேற்று 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் வந்த ராணுவ விமானம் நேற்று பிற்பகல் 1.55 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் குருராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
அமெரிக்க ராணுவ விமானத்தில் நாடு திரும்பிய 104 பேரில் 30 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள். ஹரியானா, குஜராத்தை சேர்ந்த தலா 33 பேர், மகாராஷ்டிரா, உ.பி.யை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரை சேர்ந்த 2 பேர் அடங்குவர். முன்னதாக அமெரிக்காவில் இருந்து 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. எனினும், இந்தியர்கள் எத்தனை பேர் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பேசினார். பின்னர் ட்ரம்ப் கூறுகையில், ‘‘சட்டவிரோத குடியேற்றம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன். அந்த விஷயத்தில் எது சரியோ அதை இந்தியா செய்யும் என்று தெரிவித்தார்’’ என்று கூறினார். இதையடுத்து இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.
இதற்கிடையில், வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அப்போது அதிபர் ட்ரம்பை சந்தித்து இருநாட்டு உறவை மேம்படுத்த பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அமெரிக்காவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக புளூர்பெர்க் கடந்த மாதம் புள்ளி விவரம் வெளியிட்டது.