சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
சிங்கப்பூரில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, 3-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் பஜார் அல்பியான், முகமது சோஹிபுல் ஃபிக்ரி ஜோடியை எதிர்த்து விளையாடியது.
ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் நடைபெற்ற இந்த தொடரில் சாட்விக்-ஷிராக் ஜோடி 18-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சாட்விக்-ஷிராக் ஜோடி 2 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் சர்வதேச அரங்கில் பட்டம் வென்றுள்ளது. கடைசியாக இந்த ஜோடி கடந்த 2024-ம்
ஆண்டு தாய்லாந்து ஓபனில் பட்டம் வென்றிருந்தது. இதன் பின்னர் 4 தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதும் இந்த ஜோடியால் பட்டம் வெல்ல முடியாமல் போனது. மேலும் சிங்கப்பூர் ஓபனில் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையையும் சாட்விக்-ஷிராக் ஜோடி பெற்றது.
