வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் நேற்றுமிக கன மழை பெய்தது. அதிகபட்சமாக தங்கச்சி மடத்தில் 170 மி.மீ மழை பதிவானது. ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பிற்பகல் வரை கன மழை பெய்தது. இதனால் ராமேசுவரம், மண்டபம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கனமழையால் ராமேசுவரம் பேருந்து நிலையம், லட்சுமணத் தீர்த்தம், தோப்புக்காடு, தங்கச்சிமடம் விக்டோரியா நகர், பாம்பன் முந்தல்முனை, தோப்புக்காடு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மண்டபம் கலைஞர் நகர், சமத்துவபுரம் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர். மாவட்டத்திலேயே அதிகபட்சமாக தங்கச்சிமடத்தில் 170 மி.மீ. மழை பதிவானது.