கூட்டணி அரசில் சமூக சமநிலையைப் பேணும் விதமாக, குகி சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ நெம்சா கிப்ஜென் மற்றும் நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. எல். டிக்ஹோ ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.
இதில் நெம்சா கிப்ஜென், டெல்லியில் உள்ள மணிப்பூர் பவனில் இருந்து காணொலி வாயிலாகப் பதவியேற்றுக் கொண்டார்.மேலும், பா.ஜ.க-வின் கோவிந்தாஸ் கொந்தவுஜம், என்.பி.பி கட்சியின் கே. லோகன் சிங் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் யும்நம் கேம்சந்த் சிங் நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
மணிப்பூரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தலைநகர் இம்பாலில் உள்ள மக்கள் பவனில் நேற்று மாலை இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
முன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், கேம்சந்த் சிங் ஒருமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கூட்டத்தில் பா.ஜ.க-வின் 37 எம்எல்ஏ-க்களில் 35 பேர் பங்கேற்றனர். கட்சியின் மத்தியப் பார்வையாளர் தருண் சுக், வடகிழக்கு மாநிலப் பொறுப்பாளர் சம்பித் பத்ரா உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.பி.பி (6 எம்எல்ஏ-க்கள்), என்.பி.எஃப் (5 எம்எல்ஏ-க்கள்) மற்றும் மூன்று சுயேச்சை உறுப்பினர்களுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது.



