வயோதிகம் காரணமாக, பல சமயங்களில் சொந்தக் கட்சி தலைமைக்கு எதிராகவே எக்குத்தப்பாக பேசி வைரல் ஆகுபவர் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்.
திண்டுக்கல் தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களாக தொடர் வெற்றியைப் பெற்று வரும் இவர் இம்முறை ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கிறார். ஆனால், அதை நடக்கவிடாமல் செய்ய திமுக சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது. கடந்த 1996-க்குப் பிறகு திண்டுக்கல்லில் நேரடியாக போட்டியிட்டு வெற்றிபெறாத திமுக, இம்முறை திண்டுக்கல்லாரை தோற்கடித்தே ஆகவேண்டும் என வியூகம் வகுத்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் மண்டல தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் அர.சக்கரபாணியை நியமித்திருக்கும் திமுக தலைமை, முக்குலத்தோர் வாக்கு வங்கி கணிசமாக இருக்கும் திண்டுக்கல் தொகுதிக்கு மட்டும் கூடுதல் பொறுப்பாளராக அந்த சமூகத்தைச் சேர்ந்த திருச்சி சிவா எம்.பி-யை நியமித்துள்ளது. இதற்குக் காரணமே, இம்முறை எப்படியாவது திண்டுக்கல்லை திண்டுக்கல் சீனிவாசனிடம் இருந்து கைப்பற்ற வேண்டும் என்பதுதான் என்கிறார்கள்.
முதற்கட்டமாக அமைச்சர் சக்கரபாணியும் திருச்சி சிவாவும் பூத்கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி முடித்த நிலையில், கடந்த வாரம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், திண்டுக்கல் தொகுதி பூத் கமிட்டி உறுப்பினர்கள், பாக முகவர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.
அப்போது, கட்சியினருடன் கலந்துரையாடிய உதயநிதி, “மாவட்டத் தலைநகரான திண்டுக்கல் தொகுதியை இம்முறை எப்படியாவது வென்றெடுக்க வேண்டும்” என உறுதிபட தெரிவித்ததுடன், “இதற்காக திண்டுக்கல் தொகுதியில் இளைஞரணியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த கட்சித் தலைமையை வலியுறுத்துவேன்” என்றும் சொல்லி இருக்கிறார்.
உதயநிதி சொல்லி இருப்பதை வைத்துப் பார்த்தால், இம்முறை திண்டுக்கல்லை வழக்கம் போல் சிபிஎம் கட்சிக்கு தரப்போவதில்லை திமுக என்பதும், இளைஞரணியைச் சேர்ந்த ஒருவருக்கு சான்ஸ் கிடைக்கலாம் என்பதும் அரசல் புரசலாகத் தெரிகிறது.