இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியுடன் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா இன்று இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஹர்ஷித் ராணா, ரஞ்சி கோப்பை தொடரில் அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களையும், 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட்களையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். மேலும் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 59 ரன்கள் சேர்த்து டெல்லிஅணி முன்னிலை பெற உதவியிருந்தார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பிரதான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 22 வயதான ஹர்ஷித் ராணா, அசாம் அணிக்கு எதிரான ஆட்டம் முடிந்த கையுடன் இந்திய அணியில் இணைய உள்ளார். எனினும் அவர், இந்திய அணியின் உறுப்பினராக இணைய உள்ளாரா? அல்லது மாற்று வீரராக இணைய உள்ளாரா? என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை கருத்தில் கொண்டு நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும் என தெரிகிறது. இதன் காரணமாகவே ஹர்ஷித் ராணா அவசரமாக இந்திய அணியுடன் இணைகிறார் எனவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக அவர், மும்பை டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக இடம் பெறக்கூடும்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. எனினும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் மும்பை டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என நெருக்கடியுடன் இந்திய அணி உள்ளது.
 
            

