‘உதய்ப்பூர் ஃபைல்ஸ்’ தயாரிப்பாளருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

0
119

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், கன்னையா லால் என்ற தையல்காரர் கடந்த 2022-ம் ஆண்டு முகமது ரியாஸ் மற்றும் முகமது கவுஸ் ஆகியோரால் கொலை செய்யப்பட்டார். பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் சர்ச்சையான கருத்துக்கு ஆதரவாக, சமூக ஊடகத்தில் கன்னையா லால் கருத்து தெரிவித்திருந்தார். அதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை மையப்படுத்தி ‘உதய்ப்பூர் ஃபைல்ஸ்’ என்ற படத்தை அமித் ஜானி என்பவர் தயாரித்துள்ளார். கன்னையா லால் கதாபாத்திரத்தில் விஜய் ராஸ் நடித்துள்ளார். இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் ‘காக்கிச் சட்டை’ படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நிரந்தரத் தடை விதிக்கக் கோரி ஒரு தரப்பு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. படத்திலுள்ள சில ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட நீதிமன்றம் அனுமதித்ததை அடுத்து ஆக.8-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அமித் ஜானியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர்களுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் படையின் ஆயுதமேந்திய போலீஸார் 11 பேர், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். அமித் ஜானி, டெல்லி, உத்தரபிரதேச மாநிலங்களுக்குச் செல்லும்போது மட்டும் இந்தப் பாதுகாப்பு வழங்கப்படும். இதற்காகப் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அமித் ஜானி நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here