கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ‘எக்ஸ்’ தளம் முறையீடு செய்ய முடிவு – பின்னணி என்ன?

0
16

இந்திய சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டுமென எக்ஸ் சமூக வலைதளத்துக்கு கடந்த 24-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இந்நிலையில், இந்த உத்தரவு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது எக்ஸ் தரப்பு. அதன் பின்னணி குறித்து பார்ப்போம்.

இந்திய தகவல் தொழில்நுட்ப விதியின் சட்டப் பிரிவு 79-ன் கீழ் எக்ஸ் நிறுவனத்துக்கு சில ட்வீட்களை நீக்குவது மற்றும் சிலரின் கணக்குகளை முடக்குவது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எக்ஸ் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி என்.நாகபிரசன்னா கடந்த 24-ம் தேதி விசாரித்தார். அதன் பின்னர் இந்த மனுவை அவர் நிராகரித்தார்.

நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளதாவது: சமூக வலைதளங்களை முறைப்படுத்துவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது. மேற்பார்வை இல்லாமல் மைக்ரோ பிளாக்கிங் தளங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதிக்க முடியாது. சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியாவில் ஒழுங்குமுறையின்றி செயல்பட அனுமதிக்க முடியாது. நாட்டின் சட்டதிட்டத்துக்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும். இந்தியாவில் தங்கள் இயக்கத்தை விரும்பும் ஒவ்வொரு நிறுவனமும் இதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அது எக்ஸ் தள நிறுவனத்துக்கும் பொருந்தும்.

பேச்சுரிமைக்கான அரசியலமைப்பு பாதுகாப்பு இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அல்ல. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. இந்தியா விளையாட்டு மைதானம் அல்ல. அமெரிக்க நீதித்துறையின் செயல்முறைக்கு ஏற்ப இந்திய நீதித்துறையின் செயல்முறையை கொண்டு செல்ல முடியாது என்று தெரிவித்தார்.

எக்ஸ் தளம் அறிக்கை: கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பாக எக்ஸ் தளம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எங்களுக்கு சங்கடம் தந்துள்ளது. இது லட்சக்கணக்கான காவல் துறை அதிகாரிகள் தன்னிச்சையான முறையில் எக்ஸ் தளத்தில் உள்ள கன்டென்ட்களை நீக்குவது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க அனுமதி அளிக்கிறது. கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்த உத்தரவை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்வோம் என எக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here